ஸ்பெயின் காட்டுத்தீ.

14.07.2026 08:34:41

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தனது மனைவியும் 12 நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியது எவ்வாறு என்பதை பிரித்தானியர் ஒருவர் விவரித்துள்ளார். பிரித்தானியரான 70 வயது மால்கம் டிம்ப்ரெல், அல்மேரியா மாகாணத்தில் உள்ள பெடார் (Bédar) கிராமத்தில் தனது மனைவி அனெட் கில்கோருடன் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் அப்பகுதி அழிந்தது; இதில் குறைந்தது 13 பேர் மரணமடைந்தனர். தீப்பிழம்புகள் தங்கள் வீடுகளை நெருங்கிய நிலையில், ​​அந்தத் தம்பதியினரும் அவர்களது அண்டை வீட்டாரும் காரில் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

    

 

இந்த நிலையில், டிம்ப்ரெல் தனது அன்புக்குரிய பூனைகளான சார்லி மற்றும் லில்லிக்காக வீட்டிற்குத் திரும்பும் முடிவை ஒரு நொடிப் பொழுதில் எடுத்தார்.

அந்த இரண்டு பூனைகளையும் அழைத்துக்கொண்ட பிறகு, டிம்ப்ரெல் தமது மனைவி உள்ளிட்ட அந்தக் குழுவினரைச் சென்றடைய முயன்றார்; ஆனால், அவர்கள் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறியிருந்ததைக் கண்டார்.

தீப்பிழம்புகளுக்கு நடுவே நடந்து செல்வது மட்டுமே பாதுகாப்பான வழி என்று தனது மனைவியும், மற்ற ஏழு நண்பர்களும் அண்டை வீட்டாரும் முடிவு செய்ததாக அவர் பிபிசியிடம் கூறினார்.

அந்த முடிவை எடுக்க வேண்டாம் என தாம் அலறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றே டிம்ப்ரெல் தெரிவித்துள்ளார். மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நெருப்பைக் கடப்பது ஆபத்தான முடிவென்றாலும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றே இவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தனித்துவிடப்பட்ட டிம்ப்ரெல், கைவிடப்பட்ட கார்களில் ஒன்றில், நெருப்பில் இருந்து தப்பிக்க ஒளிந்துகொண்டுள்ளார். ஒருகட்டத்தில் தீப்பிழம்புகள் கடந்து சென்றதை அடுத்து, டிம்ப்ரெல் அவசரகால தீயணைப்புக் குழுவினரால் மீட்கப்பட்டார்.

தற்போது டிஎன்ஏ தெளிவுபடுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அந்தத் தம்பதியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பாதையில் எட்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுவரை ஐந்து பிரித்தானியர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, சியரா டி லாஸ் ஃபிலாப்ரேஸ் (Sierra de Los Filabres) மலைகளுக்கு அருகிலுள்ள அரை-வறண்ட பகுதியில் இந்தத் தீ விபத்து முதன்முதலில் ஏற்பட்டது.

மரணமடைந்தவர்களில் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த மையப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 12 உடல்களில், அடையாளம் காணப்பட்ட முதல் ஆறு பேர் இவர்களே என்று அடையாளம் காணும் பணிகளை ஒருங்கிணைக்கும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்தில் காயமடைந்த முதிய பிரித்தானியப் பெண் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக அண்டலூசியப் பிராந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.