கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி

27.10.2021 15:27:18

சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்கவைத்த 15 டன் வாழைத்தார்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இச்செயலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல்லில் பழுக்கவைத்த வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆகியோரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் பழ மார்க்கெட்டில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கார்பைடு கல் மற்றும் ரசாயன கலந்து பழுக்கவைக்கப்பட்டிருந்த 15 டன் வாழைத்தார்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வழைத்தார்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து மார்க்கெட் பின்புறம் உள்ள இடத்துக்கு கொண்டு சென்று அழித்தனர்.