மொட்டுவில் ரணிலை ஆதரிக்க பேச்சு

25.07.2024 08:47:07

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 48 பேர்,  கொழும்பில் இரண்டு இடங்களில், புதன்கிழமை (24)  சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில்  ) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,  இராஜாங்க அமைச்சர்கள் 30  பேர் கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் 18 பேர் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டு  சின்னத்தில் வேட்பாளரை முன்வைத்தால் ஏற்படும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவதே இரு தரப்புகளினதும் இறுதி இணக்கம்.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், அரசியல் அலுவலகம் ஸ்தாபித்தல், வாக்களிப்பு முகவர்கள் நியமனம், ஊடகப் பணிகள் போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விரிவான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அரசால் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க, தொகுதி அளவில் முறையான பொறிமுறையை அமைப்பது குறித்தும் அறிக்கையில் விவாதிக்கப்பட்டது.