சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது!
|
சென்னை என்றாலே பலருக்கும் மெரினா தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது சென்னையின் 'ரியல் எஸ்டேட்' மற்றும் 'லைஃப்ஸ்டைல்' திசைகாட்டி கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பக்கமாகத் திரும்பியிருக்கிறது. ஒருகாலத்தில் வெறும் வீக்-எண்ட் டிரைவ்களுக்கு மட்டும் பயன்பட்ட ECR, இன்று பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேசத் தரத்திலான திட்டங்களால் சென்னையின் 'ஹாட் ஸ்பாட்' ஆக உருவெடுத்து வருகிறது. சென்னை மக்களின் விருப்பமான பகுதியாக கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வேகமாக மாறி வருகிறது. |
|
கடற்கரையோரப் பகுதிகளில் பிரமாண்டமான உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் ஹோட்டல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல சிறப்பான வசதிகள் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கே அமைய உள்ள பல முக்கிய திட்டங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். இனி வார இறுதி நாட்களில் எங்கே போவது என்ற கவலை வேண்டாம். சுமார் 223 ஏக்கர் பரப்பளவில் 'நந்தவனம் பாரம்பரியப் பூங்கா' அமையவிருக்கிறது. மத்திய அரசின் ₹100 கோடி நிதி ஒப்புதலோடு உருவாகும் இந்தப் பூங்கா, வெறும் செடி கொடிகள் மட்டுமல்ல. பிரம்மாண்ட நடைபாதைகள், ஷாப்பிங் ஏரியாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேகத் தளங்கள் என ஒரு மினி நகரமாகவே காட்சியளிக்கப் போகிறது. தற்போது இதற்கான டெண்டர் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் சென்னையை உலகளாவிய பிசினஸ் ஹப்பாக (MICE) மாற்றும் நோக்கில் ₹525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் தயாராகி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருவதால், அடுத்த ஆண்டுக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. சர்வதேசக் கண்காட்சிகள் இனி இங்கேதான் அரங்கேறும்! நட்சத்திரங்களின் சங்கமம்! ECR-ன் கடலோர அழகை இன்னும் மெருகேற்ற 'லக்ஸுரி' ஹோட்டல்கள் அணிவகுக்கின்றன. தாஜ் ECR (151 அறைகள்) கிராண்ட் ஹயாத் (250 அறைகள் - சென்னையின் டாப் லெவல் ஆடம்பரம்!) ரேடிசன் பார்க் இன் மற்றும் இன்டர்கான்டினென்டல் என வரிசையாக நட்சத்திர விடுதிகள் வருவதால், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை புதிய உச்சத்தைத் தொடப்போகிறது. வானைத் தொடும் குடியிருப்புகள் இங்கு வீடுகள் வாங்குவது இப்போது ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாறிவிட்டது. 41 மாடிகளைக் கொண்ட 'வூரா ஒன் சீ', 34 மாடிகள் கொண்ட 'ஆல்டியஸ் ஓசன் கிளிஃப்' என வானளாவிய அடுக்குமாடி குடியிருப்புகள் ECR-ன் ஸ்கைலைனை மாற்றிக் கொண்டிருக்கின்றன. சாலை விரிவாக்கம்: முற்றுப்புள்ளி வைக்கப்படும் டிராபிக்! போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கோவளம் முதல் அக்கரை வரை 8.6 கி.மீ தூரம் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. "நிலம் கையகப்படுத்துவதில் இருந்த இழுபறிகள் சரி செய்யப்பட்டுவிட்டன, ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடியும்" என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். 2005-ல் தொடங்கப்பட்ட இந்த நீண்டகால கனவுத் திட்டம், 2018-ல் வேகம் எடுத்து, கொரோனா தடையைத் தாண்டி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய 400 MLD பேரூர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடந்து வருகின்றன. மொத்தத்தில், அடுத்த சில ஆண்டுகளில் நாம் பார்க்கப்போகும் ECR முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இருக்கும் என்பது மட்டும் உறுதி! |