ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
பிரிட்டனின் ‘ரொயல் மெயில்’ தபால் சேவை நிறுவனத்தை ஏமாற்றி, சுமார் 70 மில்லியன் பவுண்டுகள் (£70m) பெறுமதியான தபால் மோசடியில் ஈடுபட்டு, ஆடம்பர சொத்துக்கள் மற்றும் வாகனங்களை குவித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவர் ரொயல் மெயில் நிறுவனத்திற்கு 5 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையைத் (£5m) திருப்பிச் செலுத்த வேண்டும், தவறினால் மீண்டும் நீண்டகால சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நரிந்தர் சந்து என்ற நபர் தபால் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் கடந்த 2008 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான ஒன்பது ஆண்டு காலத்தில், தபால்கள் அனுப்பப்படும் இடங்கள் மற்றும் தபால் பொருட்களின் எண்ணிக்கையைத் தவறாகப் பிரகடனப்படுத்தி ரொயல் மெயில் நிறுவனத்தை ஏமாற்றி வந்துள்ளார் என்பது சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட போலித் தபால்கள் பக்ஷிர் (Berkshire) மற்றும் பக்கிங்ஹாம்ஷையர் (Buckinghamshire) ஆகிய பகுதிகளில் உள்ள தளவாட நிறுவனங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மோசடி வலைப்பின்னலால் ரொயல் மெயில் நிறுவனத்திற்கு ஒட்டுமொத்தமாக 70 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மோசடிச் சதித்திட்டத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நரிந்தர் சந்துவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் அவர் அபராத தொகை செலுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் மேலும் 8 ஆண்டுகள் சிறை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.