இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
|
தமிழகத்தில் ஜனநாயகத் திருவிழாவின் மிக முக்கியமான அங்கமான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முறையான அறிவிப்பை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் துல்லியமான விவரங்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு இன்று மக்கள் பார்வைக்கு வருகிறது. இது மிகந்த எதிர்பார்ப்பை வாக்காளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில், கடந்த நவம்பர் 4ம் தேதி சிறப்பு சார் எனப்படும் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. |
|
இதற்கு முன்னதாக பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட சில குழப்பங்களைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இத்தகைய தீவிர திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, முதற்கட்ட சரிபார்ப்புக்கு பிறகு 5.43 கோடியாகக் குறைந்தது. அதாவது, இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இந்த வரைவுப் பட்டியல் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் புதிய பெயர்களை சேர்க்கவும், பிழைகளை திருத்தவும் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். நேரடியாகவும் இணையதளம் வழியாகவும் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 ஆக இருந்தது. குறிப்பாக, நிரந்தரமாகக் குடிபெயர்ந்ததாகக் கருதப்பட்ட 66 லட்சம் பேரில், சுமார் 23 லட்சம் பேர் மீண்டும் தங்கள் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியல் மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த விண்ணப்பங்களை அந்தந்த பகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கள ஆய்வு செய்து, தகுதியானவர்களின் பெயர்களைப் பட்டியலில் இணைக்கும் பணியை அண்மையில் நிறைவு செய்தனர். மாவட்ட வாரியாக இறுதி செய்யப்பட்ட இந்தப் பட்டியல்கள் இன்று முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் ஒரு மைல்கல்லாக இந்த வெளியீடு அமைகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்கள் மாநிலம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த இறுதித் தரவுகளை முறைப்படி வெளியிடுகிறார்.. தற்போதைய கணிப்புகளின்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை இன்று முதல் இணையதளம் மூலமாகவும் உறுதி செய்து கொள்ளலாம்.. ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் இந்த முக்கிய ஆவணம், தமிழகத்தின் எதிர்காலத் தேர்தல்களுக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமையப்போகிறது.. ஒவ்வொரு குடிமகனும் இந்தப் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியமான கடமையாகும்.. |