சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா விபத்தா ?
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா அல்லது விபத்தா என்பதில் சந்தேகம் நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு உண்மையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமரர் சனத் நிசாந்தவுக்கான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா? அல்லது விபத்தா? என்பதில் பாரிய சந்தேகம் உள்ளது.அதனால்தான் அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் இந்த முறைப்பாட்டை துரிதமாக விசாரணை செய்து உண்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இதில் தொடர்புள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது தற்போது புதிய கலாசாரமாக காணப்படுகிறது. 225 பேரில் மூன்று பேரைக் கொண்டவர்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் விமர்சிக்கிறார்கள்.அரசியல் கலாசாரத்துக்கு எதிரான கருத்துக்களையும் குறிப்பிடுகிறார்கள்.
சனத் நிஷாந்த கௌரவமானவர், பண்பாளர், மனிதாபிமானமிக்கவர். பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்பட்டவர். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் அவரது இறப்புக்கு வருகை தந்த பெருந்திரளான மக்கள் அந்த குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கினர்.
சனத் நிஷாந்த உயிருடன் இருந்த போதும் சமூக வலைத்தளங்கள் அவரை கடுமையாக விமர்சித்தன.அவர் உயிரிழந்த பின்னரும் கடுமையாக விமர்சிக்கின்றன.அவரை கழுதை என்று விமர்சித்ததுடன் புத்தளம் மாவட்ட மக்களையும் கழுதைகள் என்று விமர்சிக்கும் மனநிலையிலேதான் ஊடகங்கள் இருந்தன.
சனத் நிஷாந்தவை போன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் இறக்க வேண்டும் என்று மூன்று பேரைக் கொண்டுள்ள அரசியல் தரப்பினர் நினைக்கின்றனர் .பொய்யான கருத்துக்களை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள். இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.