ரஷிய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு

20.02.2022 12:24:09

சோவியத் ஒன்றியம் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்து கொள்ள ரஷிய முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.

 

இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ள ரஷியா, எந்த நேரத்திலும் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது. 

 

 

ரஷியாவுடன் அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டன்ட்ஸ்க் மாகாணத்தில் தனிநாடு கோரி போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

 

இந்த மாகாணத்தின் ஒரு பகுதி அரசின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

 

இதுஒருபுறமிருக்க நேற்று லுஹான்ஸ்க் நகரில் உள்ள எரிவாயு குழாய்களில் அடுத்தடுத்து பயங்கர வெடிப்பு நேரிட்டது. இதனால் டன்ட்ஸ்க் மாகாணத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ரஷியா வேண்டுமென்றே டன்ட்ஸ்க் மாகாணத்தில் பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்க நாடகமாடி வருவதாக குற்றம் சாட்டியது.

 

ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், உக்ரைனின் எல்லையில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை குறைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இந்த நிலைமை கவலையை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். 

 

இந்த நிலையில், ரஷியா  அணு ஆயுதப் பயிற்சியின் போது, ​​ஹைப்பர்சோனிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை கடலில் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறும்போது, உக்ரைன் மீது படையெடுக்க புதின் ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அதை நம்புவதற்கு காரணம் உள்ளது. வரும் வாரத்தில் அல்லது அதற்கு முன்பாகவே தாக்குதல் தொடங்கலாம். 28 லட்சம் அப்பாவி மக்கள் வசிக்கும் உக்ரைனின் தலைநகரான கீவை அவர்கள் முதலில் குறிவைப்பார்கள்” என்றார். மேலும், ரஷியா போரை தேர்வு செய்தால் அந்த நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனவும் ஜோ பைடன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்..

 

இதனிடையே,  பெலாரஸ் நாட்டை ஒட்டிய பகுதியில் ரஷியா அணு ஆயுத பயிற்சியில்  சனிக்கிழமை ஈடுபட்டுள்ளது. அதேபோல், கருங்கடல் பகுதியிலும் தொடர்ந்து கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருவது உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  அழைப்பு விடுத்துள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிவதாகவும், அதற்கான இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யட்டும் என்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை