மொடேர்னா குழந்தைகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடங்கியது !
கொரோனா தடுப்பூசி சிறுவர்களுக்கு பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதைத் ஆராயும் சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக மொடேர்னா இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஆறு மாதம் முதல் 11 வயதுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கத் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சோதனையில் அமெரிக்காவிலும் கனடாவிலும் சுமார் ஆறாயிரத்து 750 தன்னார்வலர்கள் இணைக்கப்படவுள்ளனர். இதற்கு அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்று நோய்கள் மற்றும் பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையகம் தம்முடன் ஒத்துழைப்பை வழங்குவதாக மொடர்னா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனையின் முதல் கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு அளவுகளில் தடுப்பூசிகளைப் பரிசோதிக்கவுள்ளார்கள்.
இதன்படி, இரண்டு முதல் 11 வயதிற்குட்பட்ட ஆய்வில் பங்கேற்கும் சிறுவர்கள் ஒருதடவை தடுப்பூசிக்கு 50 அல்லது 100 மைக்ரோகிராம் அளவினைப் பெறுவார்கள். அதேநேரத்தில், ஆறு மாதங்கள் முதல் 24 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகள் ஒருதடவை தடுப்பூசிக்கு 25 அல்லது 50 அல்லது 100 மைக்ரோகிராம் அளவினைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து அளவுகளும் இரண்டு நாட்கள் முதல் 28 நாட்கள் இடைவெளியில் நிர்வகிக்கப்படும்.
இதேவேளை, ஆய்வின் இரண்டாம் கட்டத்தில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த அளவுகளை வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சோதனையின் முதற்கட்டத்திலிருந்து தரவை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது, இளம் வயதினரிடையே கொரோனா தடுப்பூசியின் சாத்தியமான பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறனை மதிப்பிடுவதற்கு உதவும் என மொடேர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.