சஜித்திற்கு ஜனாதிபதியிடமிருந்து கடிதம்

13.05.2022 05:21:37

புதிய பிரதமர் பதவி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு அடிப்படை நிபந்தனைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை தற்போது மாற்ற இயலாது என்றும்,சஜித் பிரேமதாச முன்வைத்த சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி தனது  கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வாக ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டு பிரதமராக செயற்பட்ட மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க தீர்மானித்ததாக குறித்த கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய தேவையின் அடிப்படையில் தங்களது கட்சியின் சிலரை, நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் உள்ளீர்க்க உடன்பட்டால் தவறாது தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தனது கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.