ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்!

17.10.2025 14:31:17

பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யன் என்ற அடையாளத்துடன் ராஜா ராணி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அங்கீகாரம் பெற்றவர் அட்லீ. முதல் படத்தின் ஆரம்பித்தவர் அடுத்தடுத்த படங்களில் வெற்றிக்கண்டு கடைசியாக ஹிந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கினார். ஷாருக்கான் நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது.

அப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ரூ. 800 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இயக்கி வருகிறார். இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரூ. 800 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் என்றால் எவ்வளவு வேலை இருக்கும், அதற்கு நடுவில் அட்லீ ஒரு பிரம்மாண்ட விளம்பர படத்தை இயக்க உள்ளாராம். பான் இந்தியா படங்களின் பட்ஜெட்டுக்கு நிகரான விளம்பர படம் ஒன்று எடுக்க உள்ளாராம்.

ரூ. 150 கோடி பட்ஜெட்டில் ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா போன்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்களாம். இது 'சிங்ஸ் தேசி சைனீஸ்' என்ற பிராண்டிற்கான விளம்பரம். இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான விளம்பரமாக இது உருவாகிறது.

இந்த விளம்பரத்தை அட்லீ மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதற்காக பெரிய செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், இதில் பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் இருக்கும் என தெரிகிறது.