துனிசியாவில் அமைந்தது புதிய அரசு

12.10.2021 10:03:53

துனிசியாவில் 11 வாரங்களுக்குப் பின் பிரதமர் நஜ்லா போடன் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. முதன் முறையாக பிரதமர் உட்பட 10 பெண்கள் இந்த அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ளனர்.

வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த துனிசியா, அரசு துறைகளில் லஞ்ச ஊழல், கொரோனா பாதிப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது.ஜூலையில் துனிசிய அதிபர் கைஸ் சயீத் திடீரென பிரதமர் ஹிகெம் மெகிச்சி தலைமையிலான அரசை கலைத்து பார்லியை., முடக்கினார். இதையடுத்து கைஸ் சயீத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, 'கொரோனா நெருக்கடியை சமாளிக்க தற்காலிகமாக பார்லி., முடக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய அரசு அமைக்கப்படும்' என, கைஸ் சயீத் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் துனிசியா பிரதமராக நஜ்லா போடன் அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று பிரதமர் நஜ்லா போடன் தலைமையில் துனிசியாவில் புதிய அரசு அமைந்தது. அதில், இதுவரை இல்லாத வகையில் பிரதமர் உட்பட 10 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதில், முந்தைய அரசில் நிதியமைச்சராக இருந்த சிஹம் பக்திரி நெம்சயாவுக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.''லஞ்ச ஊழலை ஒழித்து, கொரோனா நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதே தன் முதல் வேலை,'' என, நஜ்லா போடன் தெரிவித்துள்ளார்.