டெலிகிராம் நிறுவனருக்கு பிரான்சை விட்டு வெளியேற தடை!

29.08.2024 09:03:11

சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்களை அனுமதித்ததாக குறிப்பிட்டு பிரான்ஸ் நீதிமன்றம், பாவல் துரோவ் மீது வழக்கு பதிந்துள்ளது. அத்துடன் அவர் பிரான்சை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பிறந்த பாவல் துரோவ், கடந்த 2021 முதல் பிரான்ஸ் குடிமகனாக உள்ளார். கடந்த சனிக்கிழமை பாரீஸ் நகருக்கு வெளியே உள்ளூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். துரோவ் தொடர்பில் 12 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, கடந்த மாதம் விசாரணை துவக்கப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

   

நான்கு நாட்கள் விசாரணையை அடுத்து புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் 5 மில்லியன் யூரோ செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன் நீதித்துறை கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளார்.

துரோவ் தற்போது பிரெஞ்சு அதிகாரிகளின் முறையான விசாரணை வட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார். மட்டுமின்றி, வாரத்தில் இருமுறை காவல் நிலையமொன்றில் அவர் முகம் காட்டவேண்டும்.

டெலிகிராம் செயலியில் சிறார் துஸ்பிரயோகம் தொடர்பான காட்சிகள் பகிரப்படுவதாகவும், போதை மருந்து கடத்தலும் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் டெலிகிராம் நிர்வாகம் இதுதொடர்பில் தரவுகளையோ தகவல்களியோ சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்து வருகிறது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், விதிகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, தங்கள் செயலியை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் பிறர் ஈடுபடுவதற்கு நிறுவனர் அல்லது நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுவது அபத்தமானது என்றே டெலிகிராம் நிர்வாகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையில் துரோவ் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

துரோவ் மீது பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், குற்றம் செய்ய உடந்தையாக இருத்தல், மோசடி, பணமோசடி, திருடப்பட்ட பொருட்களைப் பெறுதல் மற்றும் சிறார் துஸ்பிரயோகம் தொடர்பான காட்சிகளை அனுமதித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்படலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும், போதுமான ஊழியர்களை பணிக்கமர்த்தி, கட்டுப்படுத்த தவறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. துரோவ் மீதான கைது நடவடிக்கை, ரஷ்யாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில அரசாங்க அதிகாரிகள் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர். 2018ல் ரஷ்ய அரசாங்கமே டெலிகிராம் செயலியை தடை செய்ய முயன்று தோல்வி கண்டது. அதன் பின்னர் 2020ல் தடை உத்தரவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.