உக்ரைனுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்கினால்.... மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் ரஷியா

19.01.2023 22:51:28

அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறி உள்ளார்

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ரஷியாவை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. ரஷியாவை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், போர் தீவிரமடையும் என ரஷியா எச்சரித்துள்ளது.

'இது மிகவும் ஆபத்தானது. இது மோதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்கு வழிவகுக்கும். உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பின் பார்வையில் இது நல்லதல்ல' என ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையே உக்ரைனை ராணுவரீதியாக ஆதரிப்பது குறித்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ராம்ஸ்டீனில் உள்ள விமானத் தளத்தில் நாளை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. ரஷியாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியது குறிப்பிடத்தக்கது.