ஆடம்பர பண்ணை வீட்டில் வசிக்கும் புதின்..!!

02.03.2023 16:49:34

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. போர் ஏற்பட மேற்கத்திய நாடுகளே காரணம், நாங்கள் அல்ல என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இந்நிலையில், அதிபர் புதின் தனது ரகசிய காதலி அலினா கபேவா மற்றும் தங்களது குழந்தைகளுடன் ஆடம்பர பண்ணையில் வசித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா (வயது 39) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ரஷிய அதிபர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது. புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை. உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு, தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் வசமுள்ள பகுதிக்கு புதின் அனுப்பி வைத்து விட்டார் என கூறப்படுகிறது. ரஷியாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை அன்பளிப்பு என்ற முறையில் அலினா கபேவாவின் குடும்பத்தினருக்கு அளித்துள்ளனர். ரஷியாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் மற்றும் புதினின் எதிரியான அலெக்சி நவால்னி முன்பு கூறும்போது, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக அலினா இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் யூரோ மதிப்பிலான சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார். இந்நிலையில், ரஷியாவின் புலனாய்வு செய்தி தளங்களில் ஒன்றான தி புராஜெக்ட் வெளியிட்டு உள்ள செய்தியில், மாஸ்கோ நகரில் வால்டாய் என்ற ஏரியை நோக்கியபடியான சொத்துகளை புதின் விலைக்கு வாங்கி உள்ளார். அதில், 2020-ம் ஆண்டு ஆடம்பர பண்ணை வீடு ஒன்றை புதின் கட்டியுள்ளார். 13 ஆயிரம் சதுர அடியில், முழுவதும் ரஷியாவின் கலாசார அடிப்படையிலான, மரங்களை கொண்டு மட்டுமே 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில், அதிபர் புதின், அவரது காதலியான அலினா கபேவா, அவர்களின் குழந்தைகள் ஆகியோருடன் அலினாவின் பெண் உறவினர்கள் சிலரும் காணப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. இவற்றில் புதினின் படுக்கையறை பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. அறையின் மேற்புறத்தில் தங்க இலைகள் தொங்குவது போன்றும், கண்ணாடி மேஜைகளை சுற்றிலும் தங்க நாற்காலிகள் இருப்பது போன்றும் புகைப்படங்கள் வெளிவந்து உள்ளன. இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டிலேயே நவால்னி குறிப்பிட்டு உள்ளார். பட்ஜெட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, புதின் இந்த சொத்துக்கு ஒதுக்கி விட்டார் என அவர் குற்றச்சாட்டாகவும் அப்போது கூறினார்.