ஐரோப்பிய நாடுகளில் கோவிட் பலி 5% அதிகரிப்பு

19.11.2021 10:09:42

‛ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கோவிட் பலி விகிதம் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது,'' என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 75 ஆயிரத்து 58ஆக உயா்ந்துள்ளது.

அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவிட் பாதிக்கப்பட்ட 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கோவிட் பாதித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து, 360ஆக உயா்ந்துள்ளது.

பிரிட்டனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில் மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கோவிட் பலி விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வாரத்தில் மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பேர் கோவிட் பாதித்து பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.