கேரளாவைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு

05.03.2024 15:01:00

எருசலேம்: லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்து லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் வடக்கு பகுதியில் ஹெஸ்பொல்லா அமைப்பினர் தகுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நேற்று(மார்ச் 04) நடத்திய தாக்குதலில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 31 வயதான மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(மார்ச் 04) காலை 11 மணியளவில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பழத்தோட்டத்தைத் ஹெஸ்பொல்லா அமைப்பினர் தாக்கியதை அந்நாட்டின் மீட்பு சேவைகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த நபர் கேரளாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஏவுகணை தாக்குதலில் மேலும் இருவருக்கு முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மேலும் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்து இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.