பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு!

10.03.2026 15:21:53

பிஹார் அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தேசிய அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மாநில முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்த நிதிஷ் குமார் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் முதல்வர் பதவியை துறப்பதாக அறிவித்த நிலையில், இந்த முடிவு பின்னணியில் அரசியல் கணக்குகள் இருக்கலாம் என்ற கருத்தும் அரசியல் பார்வையாளர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

    

 

இந்த சூழலில், பிஹாரில் உருவாகும் அரசியல் மாற்றங்கள் மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் பாஜக இதேபோல் ஒரு திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதால் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர். பிஹார் மாநில அரசியலில் பாரம்பரியமாக இரண்டு முக்கிய பிராந்திய கட்சிகளே பெரும் செல்வாக்கு பெற்றதாகக் கருதப்படுகின்றன. அவை ராஷ்ட்ரிய ஜனதா தள் மற்றும் ஐக்கிய ஜனதா தள் ஆகியவை ஆகும்.

இந்த இரு கட்சிகளும் பல ஆண்டுகளாக அங்கு வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ளன. பாஜக ஆனால் காலப்போக்கில் கூட்டணி அரசியலின் மூலம் பாஜக அந்த மாநிலத்தில் தனது அரசியல் இருப்பை வலுப்படுத்திக் கொண்டது. நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசியல் சமரசங்களின் மூலம் பாஜக பிஹாரில் தனது ஆதரவை மெதுவாக அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக சமீபத்திய தேர்தல்களில் "இரட்டை இன்ஜின் அரசு" என்ற கோஷத்துடன் பாஜக தேர்தல் களத்தில் இறங்கியது. பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் போன்ற அறிவிப்புகள் மூலம் அந்தக் கட்சி மக்களிடையே தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்த முயன்றது.

முன்னதாக நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அப்போது ஜேடியு மற்றும் பாஜக இரு கட்சிகளும் சுமார் சம அளவில் தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஜேடியு கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக 89 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணிக்குள் தனது வலிமையை வெளிப்படுத்தியது. இந்த சூழலில் நிதிஷ் குமார் தற்போது முதல்வர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தது பல்வேறு அரசியல் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. பீகார் அரசியல் மாற்றம் குறிப்பாக தேஜஸ்வி யாதவ் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் முதல்வர் பதவியை துறப்பது மக்களிடம் செய்த துரோகம் எனவும், பாஜக சமூகநீதிக்கு எதிராக செயல்படும் கட்சியாக இருந்தும், பிஹார் போன்ற சமூகநீதியை மையமாகக் கொண்ட அரசியல் நிலப்பரப்பில் தனது சித்தாந்தத்தை செயல்படுத்த அடித்தளம் அமைத்து கொடுக்கிறார் நிதிஷ் குமார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் பிஹார் அரசியலில் பாஜக தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்த முயற்சிக்கிறது என அவர் தெரிவித்தார். சிவசேனா கட்சி அதேபோல் கடந்த காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றங்களையும் அவர் எடுத்துக்காட்டினார். அங்கு சிவசேனா கட்சி பிளவுபட்டு, ஏக்நாத் தலைமையில் புதிய அரசு அமைந்தது.

பின்னர் அந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டு தேவேந்திர பட்னாவிஸ் அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதும் அரசியல் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. பாஜக கூட்டணி அரசியல் இந்த நிகழ்வுகளை முன்வைத்து பல பிராந்திய கட்சிகள், பாஜக நாடு முழுவதும் தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து, மாநில அரசியல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. அந்த விவாதத்தில் தற்போது பிஹார் அரசியல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கிடையில் நிதிஷ் குமாரின் முடிவுக்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.

பிஹார் அரசியல் குறிப்பாக வயது காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளும் நிதிஷ்குமார் இந்த முடிவை எடுக்க தூண்டியிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்பிய அவருக்கு மாநிலங்களவைத் தேர்தல் ஒரு மரியாதையான வெளியேறும் வாய்ப்பாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மக்கள் விமர்சனத்தை சமாளிக்க தனது மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக அரசியல் மொத்தத்தில், பிஹார் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தேசிய அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி அரசியலின் எதிர்காலம், பிராந்திய கட்சிகளின் நிலைமை, மற்றும் தேசிய கட்சிகளின் விரிவாக்கம் ஆகியவை குறித்து புதிய கேள்விகளை இந்த நிகழ்வு எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், இத்தகைய அரசியல் மாற்றங்கள் மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்படும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.