E-8 விசா ஒப்பந்தம் சட்டவிரோதமானது!
E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த கோசல விக்கிரமசிங்க,
“E-8 விசா முறை குறித்து சமூகத்தில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, இந்த விசா 5 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்நிலைமையால் பல பிரச்சனைகள் எழலாம் எனவே இது தொடர்பில் எந்த அரசாங்கமும் உடன்பாடுகளை எட்டவில்லை. மேலும், இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை.
“இந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க அந்த நாட்டுக்கு சென்று அந்த மாகாண ஆளுநருடன் வண்டோ (Wando) என்ற ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.இதற்கு அமைச்சரவையின் அனுமதியோ அல்லது வேறு எந்த அனுமதியோ அப்போது வழங்கப்படவில்லை. அனுமதியின்றி இவ்வாறு தனிப்பட்ட தலையீட்டின் பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க முடியாது. உண்மையில் நடந்திருப்பது சட்ட விரோதமான ஒப்பந்தம்தான். இதுபற்றி கேள்விப்பட்ட தென்கொரிய அரசு, எம்முடன் கலந்துரையாடி, தொழிலாளர்களை இவ்வாறு அழைத்து வரக்கூடாது என தெரிவித்தது.
"கொரிய அரசாங்கம் E-9 விசாவின் கீழ் சில தரங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 7,000க்கு மேற்பட்டோரை அனுப்பலாம் என நினைக்கிறேன். அந்த குழு 4 ஆண்டுகள் 10 மாதங்களுக்காக செல்கிறது. இதன் காரணமாக, சட்டப்படி கிடைத்த வேலைவாய்ப்புகளை, அதிக வருமானம் பெறக்கூடிய வேலைகளை இழக்க நாம் சிறிதும் தயாராக இல்லை. E-8 விசா முறையின் கீழ் தென் கொரியா செல்ல பணம் செலுத்த வேண்டாம் என்று வேலை தேடுபவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.