மீண்டும் எழுச்சி பெறுவாரா 'மக்கள் நாயகன்' ராமராஜன்..?
'மக்கள் நாயகன்' ராமராஜனுக்கு தமிழகத்தின் தென் பகுதிகளில் இன்றைக்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிப்பில் புதிய திரைப்படம் வராதா..? என பத்தாண்டுகளுக்கு மேல் தவம் கிடந்து காத்திருந்த ரசிகர்களுக்கு.. அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'சாமானியன்' எனும் திரைப்படம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான நிலையிலேயே அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஆர். ராகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சாமானியன்' எனும் திரைப்படத்தில் ராமராஜன், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், கே. எஸ். ரவிக்குமார், ஷரவண சுப்பையா, நக்க்ஷா சரண், லியோ சிவக்குமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், அபர்னதி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான வி. மதியழகன் தயாரித்திருக்கிறார்.
'மக்கள் நாயகன்' ராமராஜன்- 'இசைஞானி' இளையராஜா கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2012 ஆம் ஆண்டில் 'மக்கள் நாயகன்' ராமராஜன் நடிப்பில் 'மேதை' எனும் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ராமராஜன் நடிக்கும் 'சாமானியன்' எனும் திரைப்படம் வெளியாகிறது. ராமராஜனுக்கு இந்த திரைப்படத்தில் ஜோடி இல்லை என்றாலும் பாடல்கள் இருப்பதாலும், அவற்றுக்கு இசைஞானி இசையமைத்திருப்பதாலும்.. ரசிகர்களிடையே படத்தை முதல் நாள் முதல் காட்சி காண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.