498 ரஷிய வீரர்கள் பலி
உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவ தரப்பிலும் வீரர்கள் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் ரஷிய தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. இதுதொடர்பாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, 9 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் போரில் உயிரிழப்பு குறித்து ரஷியா தொடக்கத்தில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. பின்னர் சண்டையில் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மட்டும் தெரிவித்தது. ஆனால் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் உக்ரைனுடனான போரில் பலியான வீரர்களின் எண்ணிக்கையை ரஷிய அரசு முதல்முறையாக தெரிவித்துள்ளது. போரில் இதுவரை ரஷிய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறும்போது, ‘எதிரியின் (ரஷியா) திட்டங்களை நாங்கள் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளோம். இந்த திட்டங்கள் பல ஆண்டுகளாக எழுதப்பட்டது. அதனை நாங்கள் முறியடித்து இருக்கிறோம்.
ரஷிய படைகளுக்கு எதிராக மக்கள் போராடுவது பாராட்டத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.