எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை!
“யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திமுகவுக்கே உரியது” என்று கோவையில் இன்று பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்படுவதை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டுஇ தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!
2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கோவை வாழ் பொதுமக்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம்.
அதனையடுத்து 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில்இ 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.
தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு லட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்டஇ மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது “அவசரம் வேண்டாம் முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது.
அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான அழகிய நூலகத்தை கருணாநிதி உருவாக்கினார். அவரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர் அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன்.
தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்துஇ நவீன சிறுவர் நூலகம்,அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும் சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும் அப்போதைய துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம்.
கோவை மட்டுமல்ல திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திமுக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று திமுக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் திமுக அரசின் சிந்தனையில் உதித்தவை. திமுகவால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை.