காஸாவில் போர் நிறுத்தம்?

26.03.2024 07:33:07

“காஸாவின் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தி, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்று  கொண்டுவரப்பட்டுள்ளது.

 

ரமழான் பண்டிகையை கருத்தில் கொண்டு காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜோர்தான் நாட்டினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்கா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- காஸா போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 4 தடவைகள் போர் நிறுத்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

எனினும், இவையணைத்தும் தோல்வியடைந்த நிலையில், முதன் முறையாகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஸாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் என்டானியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ராஃபா நகரில் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருவததாகவும் காஸாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அங்கு தஞ்சம் அடைந்துள்ளமையால், இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசெல்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், காஸா எல்லையின் ஒருபுறம், எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் சுமார் 7,000 நிவாரண லொரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசெல்வதற்கு இஸ்ரேல் கட்டுப்பாடற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அனைத்து பிணையக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுதலை என்பன ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இதுவரை 32,000 இக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.