முடக்கக் கட்டுப்பாடுகள் டென்மார்க்கில் தளர்கின்றன

25.02.2021 09:24:22

 

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து, வரும் மார்ச் ஒன்று முதல் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்த நாடாக டென்மார்க் உள்ளதுடன், அங்கு வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது வைரஸ் பரவல் குறைந்துவருவதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உருமாறிய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ள நிபுணர் குழு, கட்டுப்பாடுகள் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

இதேவேளை, வசந்த காலம் தொடங்குவதால், மேலும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் நாட்டின் சில பகுதிகளில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து எட்டாயிரத்து 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இரண்டாயிரத்து 343 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.