உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பில் உற்சாகம்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று பதவியேற்பு நடந்தது.
ஒன்றியக்குழு தலைவர் இடத்தை பிடிக்க, சுயேச்சைகளை சரிகட்டும் 'கபடி கபடி' ஆட்டத்தை, உள்ளாட்சி பிரதிநிதிகள் துவக்கியுள்ளனர்.காஞ்சிபுரத்தின் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6, 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. 12ல் ஓட்டு எண்ணப்பட்டு, இரு மாவட்டங்களிலும் 5,528 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவியேற்பு நிகழ்ச்சி, கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.தேர்தல் நடத்து அதிகாரிகளான நாராயணன், ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மொத்தமுள்ள 11 மாவட்ட கவுன்சிலர்களில், சீனியாரிட்டி அடிப்படையில் வந்து, உறுதிமொழி படித்து பதவியேற்றனர்.ஒன்றிய கவுன்சிலருக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். வார்டு வரிசை எண்படி, கவுன்சிலர்கள் வந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு, உறுதிமொழி வாசித்து பதவியேற்றனர்.