ரணிலின் கின்னஸ் சாதனையாக இருக்கும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பெற்றோல் கப்பல் அல்லது டீசல் கப்பல்களை எடுத்து வந்து தற்போதுள்ள பிரச்சினையை தீர்க்கமுடியாது.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அலுவலக மட்ட உடன்படிக்கை செய்து கொள்ளப்படவிருந்தபோதும், அந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் இந்த உடன்படிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் செய்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டபோதும் அதனை எதிர்பார்க்க முடியாது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணம் அச்சிடல் தொடருமாக இருந்தால் பணவீக்கம் 62 வீதமாக உயரும் என்று ரணில் விக்மசிங்க கூறியபோதும், உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், பணவீக்கம் 100 வீதமாக மாறும்.
இதேவேளை எதிர்வரும் ஜூலை மாதத்தில் கடன்களை மீளமைத்தால் அது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கின்னஸ் சாதனையாக இருக்கும்.