தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்காக தனது அனைத்து செல்வாக்கையும் பிரான்ஸ் பயன்படுத்தவேண்டும்;- பிரான்சின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

22.01.2021 10:00:00

இலங்கையில் தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பிரான்ஸ் தனது அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தவேண்டும் என பிரான்சின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிற்க்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புசபை உறுப்பினர் என்ற அடிப்படையில் பிரான்ஸ் தனது அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கையில் தமிழ் சமூகத்தினர் தற்போது எதிர்நோக்குகின்ற அச்சம்மிகுந்த சூழ்நிலை குறித்து அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


யுத்தகுற்றங்கள் குறித்த விசாரணைக்கு வழிவகுக்ககூடிய, தங்கள் நிலங்கள் சொத்துக்களை இழந்த மக்களின் சார்பில் இழப்பீட்டு நடைமுறைகளை உருவாக்ககூடிய நிலைமாற்றுகால நீதி பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க தவறிவிட்டது எனவும் பிரான்சின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கடிததத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பிட்ட கடிதத்தில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலை மோசமடைகின்றது என்பதை வலியுறுத்தியுள்ள பிரான்சின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரோத பேச்சுக்கள் மீண்டும் வெளிப்பட தொடங்கியுள்ளன, என குறிப்பிட்டுள்ளனர்.