மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன், ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

02.09.2021 05:25:57

மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

தென்னிந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேற்று சந்தித்தாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ்நாட்டிற்கும், மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சட்டபேரவையில் அறிவித்திருந்தமைக்கு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திகள், மலையக மக்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை பிறந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.