ட்ரம்ப் ஹோட்டல் முன் வெடித்த டெஸ்லா கார்.

03.01.2025 08:02:19

புத்தாண்டு தினத்தன்று டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் வெளியே டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் அமெரிக்க ராணுவத்தின் தற்போதைய பணியில் உள்ள வீரர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று வேகாஸ் நகரில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் முன் அவரது ஆதரவு தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா கார் ஒன்று வெடித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை வேளையில் ஹோட்டல் முன் வந்து நின்ற டெஸ்லா கார் சிறிது நேரத்தில், அதாவது, உள்ளூர் நேரப்படி 8.40 மணிக்கு வெடித்துச் சிதறியுள்ளது.

அந்தக் காரில் எரிபொருள் நிரப்பட்டப்பட்ட கேன்களும், பெரிய பெரிய பட்டாசுகளும் இருந்துள்ளன.

இந்த வெடி விபத்தில் அந்தக் காரின் சாரதி உயிரிழந்துள்ளார், அத்துடன் 7 பேர், பெரும்பாலும் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் வெளியே டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியதில் உயிரிழந்த அந்த காரின் சாரதி அமெரிக்க ராணுவத்தில் தற்போதைய பணியில் உள்ள வீரர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளின் தகவல் படி, அந்த வாகனத்தில் இருந்தவர் ராணுவத்தின் சிறப்பு படையின் உறுப்பினரான மத்தேயு லிவல்ஸ்பெர்கர்(Matthew Livelsberger) என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கரோலினாவின் ஃபோர்ட் பிராக்(Fort Bragg) தளத்தில் பணியாற்றிய இவர் விடுமுறையில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த வெடி விபத்து பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெடி விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், வாகனத்தின் பின்புறத்தில் இருந்து வெடிமருந்துகள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.