காசாவில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஐ.நா குற்றச்சாட்டு
காஸாவுக்குள் நிவாரணப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் நடாலி பூக்ளி(Natalie Pougly) தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, பிரஸ்ஸெல்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா் அங்கு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் தடையின்றி செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்காக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிர்த்துள்ளார்.
தற்போது தங்களிடம் உணவு, கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 6,000 லொறிகளில் உள்ளன எனவும் குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில் பஞ்சம் மக்களைத் தொடா்ந்து வாட்டிவருவதாகவும்
எனவே இந்தப் பொருட்கள் அனைத்தும் உடனடியாக காஸாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்களிடமுள்ள பொருட்கள் காஸா மக்கள் அனைவருக்கும் சுமாா் மூன்று மாதங்களுக்கு உணவு வழங்க போதுமானவை எனவும் ஆனால் அவை ஜோா்தான், எகிப்து எல்லைக்கு வெளியே கிடப்பில் போடப்பட்டுள்ளன எனவும் அதனை காஸாவுக்குள் கொண்டு வர முடியவில்லை எனவும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தடைகள் இன்னும் நீடிக்கின்றமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இஸ்ரேல் சா்வதேச சட்டங்களை மீறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு சக்தியாக உள்ள இஸ்ரேல் சா்வதேச மனிதாபிமானச் சட்டம், சா்வதேச மனித உரிமைச் சட்டங்களை கடைப்பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.