
அமுலுக்கு வந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்!
தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி மோதல்கள் பதற்றங்களை அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் புதன்கிழமை (15) தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
அதன்படி, எல்லைப் பதற்றங்களைத் தணிக்க ஆப்கானிஸ்தான் தரப்பு வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இஸ்லாமபாத் வெளிவிவகார அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அதே நாளில் சமூக ஊடகங்களில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோள், வற்புறுத்தலின் பேரில் இரு நாடுகளுக்கும் இடையே புதன்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று முஜாஹித் கூறினார்.
அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் எந்த தாக்குதலையும் நடத்தாத வரை, போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதன் அனைத்துப் படைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல நாட்கள் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சண்டை மற்றும் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.
2021 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இரு இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான மிக மோசமான மோதல் இதுவாகும்.
பாகிஸ்தானில் தாக்குதல்களை அதிகரித்த போராளிகளைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் கோரியதைத் தொடர்ந்து, முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான அண்மைய மோதல் வெடித்தது.
போராளிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், தாலிபான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தான் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், எல்லைப் பதற்றங்களைத் தூண்டுவதாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் கூறியுள்ளது.
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலின் விளைவாக பொது மக்கள் பலர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.