ராஜ்ய சபாவுக்கு செல்லும் முதல் தவெக எம்பி யார்?

21.05.2026 08:25:18

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடம் உட்பட, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 25 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றியுள்ளது. 

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக சார்பில் எம்பியாக இருந்த சி.வி.சண்முகம் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார். இவரது பதவிக்காலம் 2028 வரை உள்ளதால், இந்த ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல் மற்ற மாநில தேர்தல்களுடன் இணைத்து நடத்தப்படவுள்ளது. 

 

தமிழகத்தில் காலியாகும் அந்த ஒரு இடத்திற்கு தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. தவெக தரப்பில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, அரசியல் வியூகவாதி ஜான் ஆரோக்கியசாமி, முதலமைச்சரின் தனிச்செயலாளர் ஜெகதீஷ், விஷ்ணு ரெட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் உத்தேசப் பட்டியலில் அடிபடுகின்றன. எனினும், முதலமைச்சர் விஜய் டெல்லி நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்போகும் அந்தப் புதிய முகம் யார் என்ற இறுதி சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது.