சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம்

09.08.2022 10:20:23

சீனா- தைவான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது. இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு தைவான் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வூ அளித்துள்ள பேட்டியில், தங்கள் நாட்டிற்கு யார் வரவேண்டும், யாரை நாங்கள் வரவேற்க வேண்டும் என்று, சீனா தங்களுக்கு உத்தரவிட முடியாது என்று உறுதியுடன் கூறினார்.

சீனா, தைவானை பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இது மிகவும் தீவிரமடைந்து வருகிறது என்றும், ஆனால் தைவான் அதன் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுதியுடன் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தைவானுக்கு எதிராக சீனா நிச்சயம் போர் தொடுக்கும், ஆனால் இப்போது அது தங்களை பயமுறுத்த முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.  ஆனால் நாங்கள் பயப்படவில்லை, எதற்கும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.