லும்பினிக்கு நேரடி விமான சேவை - இலங்கையிடம் கோரிக்கை

08.07.2023 16:08:21

லும்பினிக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துமாறு நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதவ் குமார் நேபால் சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த புனிதஸ்தலமான லும்பினிக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வசதியாக லும்பினி சர்வதேச விமான நிலையத்திற்கு பௌத்த நாடுகள் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் மாதவ் குமார் நேபால் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

லும்பினியில் இருந்து கொழும்புக்கான சேவை

கத்மண்டுவில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானங்கள் ஏற்கனவே சேவையில் உள்ளதுடன், புத்த பெருமானின் பிறப்பிடத்திற்கு வருகை தரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இலங்கை அதிகாரிகள் அதை லும்பினியில் இருந்து கொழும்பு வரை நீடிக்க முடியும் என்று மாதவ் குமார் குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம்(6) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, விவசாயத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் தொழிற்துறை மற்றும் நீர் மின்சாரம் போன்ற புதிய துறைகளில் ஒருவருக்கொருவர் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக மாதவ் குமார் நேபால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் நேபாள தூதுவர் பாசு தேவ் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.