பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: 78 பேர் பலி!

04.10.2024 08:01:26

காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிவு ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 78 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த படகானது சென்று சேர வேண்டிய பகுதியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. தெற்கு கிவுவில் உள்ள மினோவா நகரில் இருந்து புறப்பட்ட படகானது வியாழன் காலை கோமா கரைக்கு வந்து கொண்டிருந்தபோது மூழ்கியது.

   

இந்த விபத்து தொடர்பில் வெளியான காணொளி ஒன்று, பார்ப்போரை பதறவைத்துள்ளது. பிராந்திய ஆளுநர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், குறித்த படகில் 278 பயணிகள் இருந்துள்ளனர்.

மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை தெரியவர மூன்று நாட்களாகலாம் என்றே ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கையில், ஆற்றில் இருந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, விபத்துக்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணித்துள்ளதாகவும், விபத்திற்கு அதுவும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.

காங்கோவில் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கும் என்றே கூறுகின்றனர். படகுகள் எப்போதும் அதிக பயணிகளால் நிரம்பியிருக்கும் என்றும், அதிகமும் நீச்சல் தெரியாத மக்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது 278 பயணிகளுடன் படகு மூழ்கியதில் 78 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.