மன்னார் பெண்ணின் மரணம்

05.08.2024 09:52:51

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பினனர், உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண்ணான மரியராஜ் சிந்துஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து
பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.