அஸ்வசும திட்டத்தில் 182,140 குடும்பங்களுக்கு நிவாரணம்
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் அடிப்படையில் மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் 18 ஆம் திகதிக்குள் கணக்கிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
அதன்படி, தற்போது 1,854,000 பேர் நன்மைகளைப் பெற்று வருவதாகவும், அதற்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை, நன்மைகளைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்த சுமார் 200,000 குடும்பங்கள் தமது வங்கிக் கணக்குகளைத் திறந்து அது தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்கத் தவறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்த போதிலும், அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இரண்டாம் கட்ட தீர்விற்காக 400,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் சுமார் 286,000 இதுவரை முறைமைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மே மாதம் தொடங்க உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அஸ்வசும நலன்புரி திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களை உள்வாங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், இந்த வருட வரவு செலவு திட்டத்தில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 205 பில்லியன் ரூபாவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.