மணிப்பூர் முதல்வர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது நாட்டிற்கே தெரியும்: காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

10.08.2023 09:45:47

மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதிலும், பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி பேசும்போது ''மணிப்பூரில், நீங்கள் இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள். உங்கள் கொள்கைகள், மணிப்பூரை கொலை செய்யவில்லை. மணிப்பூரில் உள்ள இந்தியாவை கொன்று விட்டது. மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலம் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேசவிரோதிகள்'' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில் ''மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரியும். அவரது தோல்வியால்தான், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்துள்ளன. குழந்தைகள் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் கூட, உள்துறை மந்திரி அமித் ஷா அவருக்கு சிறப்பு சான்றிதழ் வழங்குகிறார். மணிப்பூர் மாநில முதல்வர் நீக்கப்பட வேண்டும் என் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வலியுறுத்துகின்றனர்'' என்றார்.