ஒரு தேசிய கட்சி இப்படி செய்யலாமா?
|
பாஜக அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டது. அந்த புகைப்படம் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. |
|
கடந்த நிதி ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.84 ஆக இருந்தது. அதே நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 2021இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90 ஆக உள்ளது. அமெரிக்க - இந்திய வர்த்தக விவாதங்களில் நிலவும் சுணக்கம், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை ஆகியவை காரணமாக, உலக முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து தங்கள் பணத்தை எடுத்ததே இதற்குக் காரணம் என்றும், பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலு பெற்றதால், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கித் திரும்பி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்கிறது. வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது. இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், ஆசியாவிலேயே மதிப்பு குறைந்த கரன்சியாக இந்திய ரூபாய் மாறி இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. "வலிமையற்ற ரூபாய் = வலிமையற்ற பிரதமர்" என்ற கேப்ஷனோடு, ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கம். அதில், ASIA என்பதில் 'A' என்பதற்குப் பதிலாக இந்திய ரூபாய் சின்னமும், அதனுடன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல்களும் இடம்பெற்றுள்ளன. "வீக்" ஆன பிரதமர் என்பதை விமர்சிக்க, ஊன்றுகோலை பயன்படுத்தி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இந்தியாவை பல முறை ஆட்சி செய்த ஒரு தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடலாமா?" எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். |