அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியா?

08.11.2022 15:50:14

2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டொனால்டு டிரம்ப். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார். இதனிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் ஒஹியோ மாகாணத்தில் இன்று ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது, நான் வரும் 15-ம் தேதி செவ்வாய்கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் (பண்ணை வீடு) வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன்' என்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் தான் போட்டியிடப்போவது குறித்து எதேனும் தகவலை டிரம்ப் வெளியிடுவாரா? அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் தான் மீண்டும் டுவிட்டரில் இணைவது குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா? என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன. இந்த கேள்விகளுக்கு வரும் 15-ம் தேதி பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.