இறுதி ஊர்வலத்தில் நால்வா் உயிரிழப்பு!
மலாவியில் மறைந்த துணை ஜனாதிபதி சொலோஸ் சிலிமாவின் (Saulos Chilima) உடலை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது, அவரது உடலை ஏற்றிக்கொண்டு தொடரணியாக சென்ற வாகனங்கள் பயணித்துள்ளன.
இந்த தொடரணியில் இராணுவம், பொலிஸ் மற்றும் இதர வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
இதன்போது, துணை ஜனாதிபதியின் இறுதி ஊா்வலத்தினைக் காண ஏராளமானோர் வீதிகளில் திரண்டிருந்தனர்.
சில பகுதிகளில் மக்கள் வீதியை வழிமறித்து, தொடரணியை நிறுத்தியுள்ளதுடன், அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே துணை ஜனாதிபதியின் உடலை ஏற்றிக்கொண்டு தொடரணியாக பயணித்த வாகனம், வழியில் காத்திருந்தவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் மோதியதில் 2 பெண், 2 ஆண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மறைந்த துணை ஜனாதிபதி சொலோஸ் சிலிமாவின் (Saulos Chilima) உடல் அவரது சொந்த கிராமமான சைப்-க்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
குறித்த கிராமம் அந்நாட்டு தலைநகர் லிலோங்விலிருந்து (Lilongwe) 180 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தில் வைத்தே அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்று நடைபெறும் இறுதி சடங்கு காரணமாக அந்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி நாட்டில் துணை ஜனாதிபதியாக செயற்பட்ட சொலோஸ் சிலிமா பயணம் செய்த விமானம் அண்மையில் விபத்தில் சிக்கியது.
இதில் துணை ஜனாதிபதி உட்பட விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.