பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

18.07.2021 15:47:40

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக சுய தனிமைப்படுத்தலை தவிர்க்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோரின் நகர்வுகளை பொதுமக்கள் விமர்சித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரித்தானிய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவிட்டுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியதன் அடிப்படையில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவலை கண்டறிவதற்கான துரித திட்டமொன்றில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்து சில மணித்தியாலங்களில் இந்த தலைகீழான மாற்றம் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க தரப்பினருக்கு ஒரு சட்டமும் ஏனையவர்களும் வேறான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் சாடியுள்ளனர்.

இதனிடையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன், காணொளி காட்சி வழியாக சந்திப்புக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்ற உணர்வு கூட தவறானது என்பதாகவே தாம் உணர்கிறேன் என நிதி அமைச்சர் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றும் விதிகள் அவர்களுக்குப் பொருந்தாது என்ற பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள் மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளதாக தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டாமர் கூறியுள்ளார்.

விதிமுறைகளை கடைப்பிடிக்க பொதுமக்கள் எவ்வளவோ செய்திருக்கிறார்கள் எனவும் சுய தனிமைப்படுத்தல் குறித்த நம்பிக்கையை பேண வேண்டிய நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் மாத்திரம் என்ன நடக்கின்றது என அனைவரும் எண்ணுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நடந்துகொள்ளும் விதம் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தை மோசமான ஒன்றாக மாற்றுவதாகவும் கூறியுள்ள அவர், இதன் ஆபத்தான விளைவுகளை பிரித்தானிய பொதுமக்களே எதிர்நோக்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.