யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் கொள்வனவு!

05.03.2026 15:20:16

யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெற்றோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெற்றோலை பெற்று சென்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற்றோலை பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு செய்யப்படுவதனால் , 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீற்றர் பெற்றோல் மேலதிகமாக நுகரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று யாழ்ப்பாணத்திற்கு , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னவளையில் இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.