பாகிஸ்தானின் 24வது பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் பிப்.8ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
இரு கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் பிரதமரும், நவாஸ் ஷெரீப் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே இம்ரான் கட்சி சார்பில் ஓமர் அயூப் கான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடைபெற்றது. 336 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஷெபாஸ் 201 வாக்குகளை பெற்று பிரதமரானார். ஒமர் அயூப் கான் 92 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதனை தொடர்ந்து பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதிபர் அரீப் ஆல்வி, ஷெபாஸ் ஷெரீப்பிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வர் ரியாம் நவாஸ், சிந்த் மாகாண முதல்வர் முரத் அலி ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்ட பிறகு 2022 முதல் 16 மாதம் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.