ஜனாதிபதியை வெளிப்படையாகவே சந்தித்தேன்!
நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். |
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துகின்றேன். தற்பொழுது ஈழத் தமிழர் சிவாஜி கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன். ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவருடைய நிலைப்பாடு என்ன? அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாக கேட்டுத் தெரிந்து கொள்கின்ற நிலையில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல. பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன். |