ஏ.ஆர்.முருகதாஸ் ஃபர்ஸ்ட் லுக் !

26.05.2022 09:12:00

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ‘1947- ஆகஸ்ட் 16' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

 

இப்படத்தை பற்றி இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களை சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.