ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில்

14.07.2022 10:09:27

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  அ.தி.மு.க. பொதுக்குழு சமீபத்தில் கூடி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற குழுவை மாற்றியமைக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால், அதை நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு சம்பந்தமாக கோர்ட்டிலும், இந்திய தேர்தல் கமிஷனிடமும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது

. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை தவிர மற்ற, வேறு எந்த கடிதமும் வரவில்லை. இன்னமும் கவர்னரிடமிருந்து நீட் மசோதாவுக்கு சரியான பதிலில்லை. குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் என நம்புகிறோம். சட்டமன்றத்தின் மரபுப்படி தீர்மானத்திற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் மக்களை புறக்கணிக்கின்ற செயலாகத்தான் இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.