அங்கீகரித்தநாடுகளை வரவேற்றுள்ள பாலஸ்தீனம்!
நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி நிலவப்போவதில்லை என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் (Jonas Gahr Store ) தெரிவித்துள்ளார்.
அத்துடன், மே 28ஆம் திகதி நோர்வே பாலஸ்தீன தேசத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டுதேசம் என்னும் தீர்வே மத்திய கிழக்கில் அமைதிக்கு அவசியமான விடயம் என தெரிவித்துள்ள பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நாடுகளின் அறிவிப்பினையடுத்து அந்த நாடுகளிற்கான தமது தூதுவர்களை இஸ்ரேல் உடனடியாக மீள அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிப்பதற்காக ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து எடுத்த முடிவுகளை வரவேற்பதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த நடவடிக்கையின் மூலம், ஸ்பெயின், நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் இரு நாடுகளின் தீர்வு மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதியை வழங்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவும் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த விடயம் இஸ்ரேலிய சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் அனைத்து சர்வதேச முயற்சிகளுக்கும் சாதகமாகப் பங்களிக்கும் என பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.