ராஜ் சோமதேவவின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்!

29.10.2026 14:08:32

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மூன்றாவது இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள், முன்னைய இரு அறிக்கைகளின் உள்ளடக்கங்களுக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. இதன் காரணமாகவே அகழ்வுச்செயன்முறையின்போதே சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம் என நாம் வலியுறுத்தினோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதைக் கண்டறிவதே பிரதானமான செயன்முறை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிவதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் விசனம் வெளியிட்டார்.

செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கைப் பேரழிவினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வி எழுவதாகவும், அங்கு உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமைகளைச் சேர்த்துப் புதைப்பதை விடவும் அவர்களது உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான கரிசனைக்குரிய விடயமாக இருந்திருக்கக்கூடும் என்றும் கடந்த வாரம் (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால சுருக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய சுமந்திரன் மேலும் கூறியதாவது:

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அண்மையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. குறிப்பாக இதிலுள்ள விடயங்கள், இதற்கு முன்னர் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட இரு இடைக்கால அறிக்கைகளில் உள்ள விடயங்களுக்கு முற்றிலும் முரணானவையாக இருக்கின்றன. அவ்வறிக்கைகளில் செம்மணியில் குற்றச்செயல் இடம்பெற்றமைக்கான சான்றுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதுடன், அதனை 'மனிதப்புதைகுழி' என அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆனால் தற்போதைய அறிக்கையில் அவ்விடயங்கள் தவிர்க்கப்பட்டு, தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரனர்த்தம் போன்ற கருதுகோள்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இவை பேராசிரியரின் அறிக்கைகளில் உள்ளடக்க அடிப்படையில் அவதானிக்கக்கூடிய முரண்பாடுகளாகும்.

அதன் காரணமாகவே செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் வேளையிலேயே சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினோம். அகழ்வுப்பணிகளை இலங்கை அரசாங்கத்தின் உள்ளகக் கட்டமைப்புக்களினாலேயே முன்னெடுக்க முடியும் என்றாலும், அவை உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா? அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சரியாகப் பத்திரப்படுத்தப்படுகின்றனவா? என்பன உள்ளடங்கலாக சகல செயன்முறைகளும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும்.

அடுத்ததாக மனிதப்புதைகுழிகளைப் பொறுத்தமட்டில், அங்கிருந்து ஒரு எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டால், அது யாருக்குச் சொந்தமானது என்பதை அடையாளம் காண்பது தான் மிகப்பிரதானமான செயன்முறையாகும். ஆனால் அதனைச் செய்யாமல், தினந்தோறும் இத்தனை எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கணக்கு வைத்துக்கொண்டிருப்பதில் எந்தவொரு பயனுமில்லை. உண்மையில் முதலாவது எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அது யாருடையது என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது 500 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டும், அதற்கு அப்பால் எந்தவொரு முன்னேற்றகரமான நகர்வும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.