தடுமாறுகிறது இ.தொ.கா: மனோ குற்றச்சாட்டு
"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி ரவுடித்தனம், காடைத்தனம் செய்கின்றதா? எனக்கேட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான மனோ கணேசன் எம்.பி., அறிவுரை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டக்கொண்டார்.
கண்டி புஸ்ஸலாவையில் வேலு குமார் எம்.பி மீது, இ.தொ.கா அங்கத்தவர்கள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி தொடர்பில், வியாழக்கிழமை (25) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில், முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவரை தனது கடமைகளை செய்ய விடாமல் தடுத்த நபர்களின் அடையாளங்கள் காணொளியில் உள்ளன. அதன்படி அவர்களை உடன் கைது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளேன் என்றார்.
1,700 ரூபாய் நாட்சம்பளம், பத்து பேர்ச் காணி, தனி வீடு, பல்கலைக்கழகம் என்று வரிசையாக மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து விட்டு, அவற்றை இந்த திகதிக்குள் பெற்று தருவோம் என்று காலகெடுவையும் அறிவித்து விட்டு, இன்று சொன்னபடி எதையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதால், இயலாமை என்ற விரக்தி உணர்வால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுமாறுகிறது என்றார்.